ஆதிகாலத்தில் எந்த தொழில் ஒருவர் புரிகிறாரோ அதை ஓட்டி அவர் அழைக்கப்பட்டார். இதை ‘வர்ணம்’ என்று அழைத்தார்கள். பிற்காலத்தில் அதை சாதி என்று பிறப்பை ஒட்டி கூறுவது வழக்கத்திற்கு வந்தது.
‘பார்ப்பனர்கள்’ என்ற சொல்லும் ஒரு வர்ணத்தவரை இழிவு படுத்த உபயோகப்படுகிறது. சங்க இலக்கியங்களில் (குறுந்தொகை, அகநானூறு) ‘பார்ப்பார்’ என வேதியர்களை குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பார்ப்பது’ (வேதங்களை அல்லது அறத்தை ஆராய்வது) தொழில் என்பதால் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ‘பிராமணன்’ என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். பிரம்மனின் (இறைவனின்) முகத்திலிருந்து தோன்றியவர்கள் என்று இந்து மத நூல்களில் இவர்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
பாராமணர், பார்ப்பனர் என்ற இரு சொற்களுமே ஒரே தொழில் செய்பவர்களைத்தான் குறித்தாலும், பிரயோகத்தில் முற்றிலும் வேறுபடுகிறது என்பது வியக்கத்தக்க ஒரு செய்திதான். பிராமணரை திட்டுவதற்கு பார்ப்பான் என்று சொல்வது வழக்கில் உள்ளது.
அதே போல், அம்பட்டர் என்ற சொல்லை ஆராயலாம். ‘அம்’ என்றால் அழகு, ‘பட்டர்’ என்றால் குருக்கள். மக்களுக்கு அழகு செய்பவர் மற்றும் புரோகிதம் (சடங்கு) செய்பவர் என்பதால் இப்பெயர் வந்தது.
ஆங்கில மருத்துவக் கருவிகள் இல்லாத காலத்தில், சிறிய அறுவை சிகிச்சைகள், காயம் கட்டுதல் மற்றும் நச்சு முறிப்பு வேலைகளைச் செய்தனர். கிராமங்களில் பெண்களுக்கு மருத்துவமனைகள் இல்லாத காலத்தில், இவர்களின் குடும்பப் பெண்கள் பிரசவம் பார்த்தனர். திருமணம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளில் முக்கியப் பங்காற்றி, கடவுளுக்கு அடுத்தபடியாகச் சடங்குகளை முன்னின்று நடத்தினர்.
அம்பட்டர்கள் கிராமத்து மக்களின் உடல் நலத்தைக் காக்கும் அடிப்படை அஸ்திவாரமாகஇருந்தனர். கோயில் திருவிழாக்களிலும், அரசு சார்ந்த நிகழ்வுகளிலும் இவர்களுக்குச் சமூகத்தில் முதல் மரியாதை அளிக்கப்பட்டது. கிராம நிர்வாகத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இவர்கள் விளங்கினர்.
பிற்காலத்தில் சாதி என்ற சொல் வர்ணத்தை ஆக்ரமித்தது: தொழிலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. யார் முடிவெட்டும் தொழிலைச் செய்தாலும் அவர்களை ‘அம்பட்டன்’ என்றனர்.
காலப்போக்கில், சமூகத்தில் சாதியப் படிநிலைகள் (உயர்வு-தாழ்வு) தோன்றின. பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் முறை வலுப்பெற்றது. உடல் அழுக்கை அகற்றும் பணியைச் செய்பவர்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை ஆதிக்கம் செலுத்தியது.
மற்ற சாதியினர் இவர்களைத் தங்களை விடக் கீழானவர்களாகக் கருதி, சமூகத்தில் பல உரிமைகளை மறுத்தனர். இதனால் இச்சொல் ஒரு சாதியையும், அதன் மூலம் அவர்களை இழிவுபடுத்தும் சொல்லாகவும் மாறியது.
முடிதிருத்துவது ஒரு தொழில், ‘Hair dressing’ என்பது விரும்பி ஏற்கும் தொழில். அது தான் ‘அம்பட்டர்’ செய்தனர். அவர்களை ஏனோ ‘நாவிதர்கள்’ என்று அழைக்கின்றனர். முடி திருத்தும்பொது இதமாக பேசுவதால் அப்படி அழைக்கப்படலாமோ?
இப்போதைல்லாம் அம்பட்டன், பார்ப்பான் என்ற சொற்கள் ஒருவரை இழிவு படுத்தும்விதமாக உபயோகப்படுத்தப்படுவது வியப்புதான்.