கோயில்களுக்கு சென்று இறைவனிடம் நோய்தீர வேண்டுபவர் யாரில்லை? ஆனால் இறைவனுக்கு அந்த சக்தி இல்லை என கவி காளமேகத்தினால் மட்டுமே சாதிக்க முடியும்! அவரின் கூற்றுப்படி தன் குடும்பத்தினரையே குணப்படுத்த இயலாத அவனால் மற்றவரை எப்படி குணப்படுத்த முடியம்! அவரின் சந்தேகத்துக்கான காரணங்களை கோடிட்டு காட்டி இயற்றிய அந்த பாடல் இதோ!
வாதக்காலாம் தமக்கு மைத்துனருக்கு நீரிழிவாம் போதப் பெருவயிறாம் புத்திரர்க்கு — மாதரையில் வந்தவினை தீர்க்க வகையறியான் வேளூரான் எந்தவினை தீர்த்தான் இவன்?
நடனடமாடுவதால் தமக்கே காலில் வாதம், மைத்துனருக்கோ நீரிழிவால் படுக்கை, மைந்தன் கணபதிக்கு பெருத்த வயிறு, இப்படி தன் குடும்பத்தனரின் நோயையே தீர்க்கமுடியாதவனா என் வினையைத்தீர்க்கப்போகிறான்? ஈசனை எப்படித்தான் ஏளனம் செய்யகிறார் இந்த காளமேகம். இப்படி ஏகத்துக்கும் வந்திப்பதால் இறைவன் பயந்து வந்து தம்மை அருளுவான் என்பது இவர் எண்ணமோ?
இதே தோரணையில், ஈசனை பார்த்து ‘ஐயோ உனக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை; நீ ஒரு அனாதை; அதனால் நீ பட்ட கஷ்டங்கள்தான் எத்தனை; பாவமய்யா நீர்’ என ஈசனை பரிதாபத்துடன் கேட்பதாக கவிஞர் பொன்னையா பிள்ளை இயற்றியது கீழ் வரும் பாடல்! தாய் தந்தை இல்லாமல், தானே துன்பப்படும் அவன் எப்படி தன்னைக்காக்க முடியும் என சந்தேகிக்கிறாரோ இவர் என்று தோன்றுகிறது!
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ அய்யா பெற்ற (தந்தை தாய்)
அந்தமிகுந்த ஸ்ரீ அம்பலவாணரே அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த (தந்தை தாய்)
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் என்னும் வில்லால் ஒருவன் அடிக்க கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க அந்த வேளை யாரை நினைந்தீரோ அய்யா பெற்ற (தந்தை தாய்)
உலகில் எல்லா உயிருக்கும் அம்மையாகவும் அப்பனாகவும் இருக்கும் இந்த ஈசனையே இப்படி பாடுவதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும் இந்த கவிக்கு?
பள்ளிகொண்ட பெருமாளை அருணாசல கவிராயர் பாடிய கீழ் வரும் பாடலும் இதே வகையை சேர்ந்ததுதான். ஏன் இப்படி களைத்து படுத்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு காரணங்கள் பல காட்டும் இவர், ஓய்வில் இருக்கும் பெருமாள் தம்மை காப்பாரோ என சந்தேக்கிறாரோ என தோன்றுகிறது!
ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதரே நீர்
(ஏன்)
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-அவதரித்த இரண்டாற்று நடுவிலே
(ஏன்)
கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ? அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ? பரசுராமனுரம் பரித்ததர்க்கோ?
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே வழி நடந்த இளைப்போ?
தூசில்லாத குஹனோடத்திலே கங்கை துறை கடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின் மிசை கிடந்த இளைப்போ?
காசினிமேல் மாரீசனோடிய கதி தொடர்ந்த இளைப்போ?
ஓடிக்களைத்தோ தேவியை தேடி இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?
கடலை கட்டி வளைத்தோ? இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?
ராவணாதிகளை முடித்த வருத்தமோ?
(ஏன்)
மதுரையிலே வரும் களையோ? முதலை வாய் மகனைத்தரும் களையோ?
எதிர் எருதை பெருங்களையோ? கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ?
புதுமை ஆன முலையுண்டு பேயின் உயிர் போக்கி அலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவி வாயை இரண்டாக்கி அலுத்தீரோ?
துதி செய் ஆயர்களை காக்க வேண்டி மலை தூக்கி அலுத்தீரோ?
ஜதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி தாக்கி அலுத்தீரோ?
மருதம் சாய்த்தோ? ஆடு மாடுகள் மேய்த்தோ?சகடுருளை தேய்தோ? கஞ்சன் உயிரை மாய்த்தோ?
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர் விடுத்த வருத்தமோ?
போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ? (ஏன்)
படி தனிலே மெத்தவும் நானே உம்மை பரம் எனவே அடுத்தேனே
அடிமை கொள்வீர் என்னைத்தானே செம்பொன் அணி அரங்கப்பெருமாளே!
ததம் உரைந்த கரும் பாறை சாபமது தடுத்து ரக்ஷித்தீரே!
விட ஒண்ணாத காகாசுரனுக்கொரு கண் விடுத்து ரக்ஷித்தீரே!
கொடுமை கொண்டழுத த்ரௌபதைக்குத் துகில் கொடுட்த்து ரக்ஷித்தீரே!மடுவில் ஆனை முன் ஓடி முதலையை மடித்து ரக்ஷித்தீரே அதுபோல்
வாரும் க்ருபை கண்ணாலே பாரும் மனக்கவலை தீரும்
நினைத்த வரம் தாரும் தாரும் என் சாமி வக்ஷமேவும்
மஹாலஷ்மியுடன் பெரும் பஷமாக என்னை ரஷிக்க எழுந்திரும்
உலகையே காக்கும் கடவுள் ஓய்வெடுக்கிறார் என்பதை சாதித்து விட்டு யாரிடம் தஞ்சமடைய உத்தேசித்திருக்கிறாரோ இந்த அருணாசல கவிராயர் ?
கவிகள் இப்படி சளைக்காமல் ஒருவரை ஒருவர் விஞ்சும் வண்ணம் இறைவனை வந்தித்து வஞ்சப்புகழ்ச்சி வகையில் அமைத்த இந்த பாடல்களின் நயங்களை அனுபவிப்பதுடன், கவிக்குயில்கள் குரலில் கேட்டு சுவைப்பதும் ஒரு இன்பம்தானே?




