நடராஜர் சிலை சித்தரிக்கும் பிரபஞ்ச நடனம் மயக்கும் அளவுக்கு அழகாக இருந்தாலும் சமச்சீர் இல்லாதது (asymmetric) என்பதுதான் உண்மை. இந்த அழகான வடிவை யார் கற்பனை செய்திருப்பார்கள் என்ற ஜயம் இயற்கைதானே?
பல்லவர் காலத்தில் (6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்) இருந்த நடராஜரை சித்தரிக்கும் ஆரம்பகால சிற்பங்கள், பிற்கால வடிவங்களை விட ஆற்றல் குறைவாகத்தான் உள்ளன.

6th/7th century Nataraja in Cave 1 of Badami cave temple

Rock-cut architecture by the Pallava king Mahendravarman I during the 7th century in Seeyamangalam, Tamil Nadu

8th-century Nataraja in Kailasa temple(Cave 16), Ellora Caves
சோழ வம்சம் (சுமார் 9-13 ஆம் நூற்றாண்டுகள்) ஆண்ட காலங்களில், கலைகள் மற்றும் கோயில் கட்டுமானத்திற்கு அளித்த அரச ஆதரவு குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில்தான் தென்னிந்தியாவில் நடராஜரின் சின்னமான இன்றைய வெண்கல சிற்பங்கள் தோன்றின எனலாம். இன்று காணப்படும் வடிவத்தை தரப்படுத்தியது அந்த காலகட்டத்தில்தான். சோழ மன்னர்கள் பக்தியுள்ள சைவர்கள். நடராஜர் சின்னம் சோழ அரச குடும்பத்தின் சக்திவாய்ந்த அடையாளமாகவே மாறியது. கும்பகோணத்திற்கு அருகேஉள்ள கோணேரி ராஜபுரத்து கோயிலில் உள்ள மிகப்பெரிய நடராஜர் சிலையின் வரலாற்றின்படி (அல்லது அது ஒரு கர்ணபரம்பரை கதையா என்று தெரியாது) அதுவே அந்த வடிவுக்கு முன்னோடியாக இருக்க வாய்ப்பு அதிகம். அங்குள்ள அந்த வடிவத்தின் முதிர்ந்த நிலையும் அதுவே பிற்கால கோயிலில் இருக்கும் நடராஜர் சிலைக்கு முன்னோடியாக அதையே முத்தாய்ப்பாக கொண்டார்கள் எனவும் கொள்ளலாம். அப்பர் கனவு கண்ட ஆடல் அரசனை, நினைவுலகத்துக்கு அந்த கலைஞன் கொணர்ந்து உயிரூட்டி உள்ளான். பல்லவ காலத்திய வடிவத்துக்கும் தற்போதய வடிவத்துக்கும் எவ்வளவு வேறுபாடு பார்த்தீர்களா?

சோழர்கள் கால வார்ப்பட சிலை கைவினைஞர்கள் “இழந்த-மெழுகு (Lost wax)” வார்ப்பு முறையில் சிறந்து விளங்கினர். அந்த தொழில் நுட்பம் சிறந்து விளங்கியது. துடிப்பான, நுணுக்கமான பல ஆயுதங்களை அணிந்த உருவங்களை அந்த முறையில் உருவாக்கினார்கள். வெண்கலத்தில் நடராஜரின் நடனத்தையும் அதன் ஆற்றல்மிக்க இயக்கத்தையும் அழகான வெளிப்பாட்டையும் அவர்களால் படம்பிடித்து காட்ட முடிந்தது.
எனவே,
“குனித்தபுருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் மனிதப் பிறவியும் வேண்டுவதே, இந்த மாநிலத்தே”
என்று நாவுக்கரசர் தேவாரத்தில் பாடியபோது இப்போதைய சிலைவடிவம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டு. ஆனாலும் அவர் கனவு கண்ட அந்த காட்சியை அப்படியே பிற்காலத்தில் வடிவமைத்த சிற்பியை எப்படி பாராட்டினாலும் ஏற்புடையதுதான்.
பிரபஞ்சத்தின் ஓய்வில்லா ஓட்டத்துக்கும் அதில் உள்ள ஒவ்வொரு அணுக்களுள்ளும் அதன் இயக்கத்துக்கும் இந்த ஆடலரசன் ஒரு வடிவமாக உள்ளான்.
நடராஜரின் சித்தாந்தத்துக்கும் அணுக்களின் இயக்கத்துக்கும் ஒற்றுமை உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் (1). இந்த ஆச்சரியமான சித்தாந்தத்தை போலவே இந்த வடிவ வரலாறும் சுவாரஸ்யமானதுதானே. இன்றைய அழகிய நடராஜர் சிலை, மத மற்றும் கலை மரபின் ஒரு வளமான பரிணாம வளர்ச்சியாகும். சோழர் காலம் இந்த உருவத்தை முழுமையாக்கியதில் பெரும் பங்கு அளித்துள்ளது உண்மைதான்.
References:
1. The Tao of Physics, Fritjof Capra





