இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் தமிழர்களில் Nadarasan என்ற பெயர் பரவலாக உள்ளது. தமிழகத்தில் Natarajan என்பதுதான் பிரபலம். இதில் எது சரியான உபயோகம்?
முதலில் பெயரின் மூலகாரணத்தை அறிய முயற்சிப்போம். சிவனின் மூன்று வடிவங்களான யோகம், லிங்கம், ஆடல் ஆகியவற்றில் ஆடல் வடிவம் தான் நடனமாடும் இந்த அழகான உருவத்தின் பெயர். நாணயங்களிலும் அரசு முத்திரைகளிலும் இந்த சிவனின் நடனவடிவம் கற்கால சிந்து நாகரிக காலத்திலேயே இருந்திருந்தாலும், 6-7ஆம் நூற்றாண்டுகளில் குப்த, சாளுக்கிய, பல்லவர் காலங்களில் பாறைசிற்பங்களில் உருமாறத்தொடங்கின. ஆகமங்கள், நடேஸ்வரன் என்று இந்த சிலை வடிவத்தை குறிப்பிடப்பட்டிருப்பதால், வடமொழியில் Nateswar என்று நாட்டியமாடும் ஈசனை குறிப்பிட்டிருக்கவேண்டும்.

ஆனாலும் இந்த சமச்சீரான (symmetrical) அழகிய நடராஜரின் உருவச்சிலை 9-10ஆம் நூற்றாண்டுகளில் சோழர் காலத்தில்தான் வடிவமைக்க பட்டிருக்கவேண்டும். வெண்கல உலோக வார்ப்பட கலைமுதிர்ச்சியும் இந்த வடிவமைப்புக்கு உதவியிருக்கவேண்டும். எவ்வளவு நுண்ணிய வடிவமைப்பு. வடிவமைத்தவன் ஏனோ தன் பெயரை வரலாற்றில் பதிவிடவில்லை – இந்த காலமாக இருந்தால் காப்புறிமை பெற்று பெரும்பொருள் ஈட்டி இருப்பான்! 8-9 ஆம் நூற்றாண்டு காலத்திய செம்பியன்மாதேவியின் (இவர் மதுராந்தகனின் தாயார் – பொன்னியின் செல்வனில் நடிகை ஜெயசித்ரா – ஞாபகம் இருக்கிறதா?) விருப்பத்தில் உருவான, தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோணேரிராஜபுரத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் உயரமான வெண்கல நடராஜர் சிலைதான் முதலில் உருவானதோ? சோழர்களின் குலதெய்வமாக நடராஜர் வழிபாடு நடந்த காலகட்டத்தில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் பல நிர்மாணவேலைகள் நடந்திருப்பதால், அங்கு இருக்கும் நடராஜர் சிலையும் கிட்டத்தட்ட அதே காலத்தில்தான் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனாலும் வரலாற்று சான்றுகள் தென்படவில்லை.

அதற்கு முன்பு தேவாரமும், திருவாசகமும் சிவனின் ஆடல் பற்றியும், குறிப்பாய் சிதம்பரத்தின் ஆடல் குறித்து சிலாகிக்கின்றன. நான்காம் திருமுறையில் வரும் தேவாரப்பபாடலில் கூத்தன், ஆடல் அரசன் என தில்லை சிவன் போற்றப்படுகிறான். இது சுமார் 6-7ஆம் நூற்றாண்டு காலமாக இருந்திருக்கலாம். ஆக சிவனின் ஆடல் பழமையான காலம் தொட்டு போற்றப்பட்ட ஒரு மரபு. ஆயினும் 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் தான் தில்லை கூத்தனை முதல் முறையாக நடராஜன் அல்லது நடராசன் என்று அழைத்தது தான் முதல் வரலாற்று பதிவாக இருக்கலாம். இவர் வாழ்ந்த காலம் 8-9 ஆம் நூற்றாண்டு. இது சிவனை நடராஜன் என அழைக்கும் வழக்கம் அந்த காலகட்டத்தில் பரவலராக இருந்ததை உறுதி செய்கிறது. அந்த வெண்கல சிலை இல்லாத காலகட்டத்தில், சிதம்பரம் கோயிலில் மூலவராக லிங்கத்தை வழிபட்டதாக ஒரு தலவரலாறு குறிப்பிடுகிறது. இந்த சிலைவடிவத்தை கோயிலில் பிரதிஷ்டை செய்தபின் தான் ‘நடராஜர்’ என்ற பெயர் பிரபலமாகி இருக்கவேண்டும். 10ஆம்நூற்றாண்டில் கர்ப்ப கிருகத்தின் மேல்கூறை பராந்தக சோழனால் வேயப்படது. அதில் தொடங்கி நான்கு கோபுரங்களும் ஒன்றன்பின் ஒன்றாக 12ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு கிருஷ்ணதேவராயர் காலம் வரை நடந்ததாக வரலாறு கூறுகின்றது. ஆகவே நடராஜர் பிரதிஷ்டை 9-10ஆம் நூற்றாண்டு காலத்தி்ல்தான் நடந்திருக்க வேண்டும்.எனவே நடராஜரின் சிலைவடிவத்துக்கு பின்தான் அந்த சொல்லாட்சி வந்திருக்கவேண்டும்.
வடமொழியில் Natan என்றால் நாட்டியம். அதிலிருந்து Nataraj அதாவது king of dance என்ற சொல் உருவாகி இருக்கவேண்டும். 9-10ஆம் நூற்றாண்டு காலங்களுக்கு பின்தான் இந்த பெயர் பிரபலமாகி இருக்கலாம்.
வடமொழி ஆதிக்கம் அதிகம் இருந்த காலத்தவரான தொல்காப்பியர் தமிழின் மேல் உள்ள பற்றாலும் வடமொழி சொறகளின் உபயோகம் புறக்கணிக்க முடியாது என்பதாலும் அந்த சொற்களை தமிழ்ப்படுத்த ஒரு இலக்கணம் வகுத்திருந்தர். அந்த விதி: “வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகுமே”. அதாவது வடசொல்லில் உள்ள ஷ, ஜ, ஹ, க்ஷ, ஶ்ரீ எழுத்துக்களை நீக்கி அவற்றை தமிழ்ப்படுத்தும் முயற்சிக்கு இந்த இலக்கண விதி வழி வகுத்தது. இதன்படி Natarajan என்ற வடசொல் Natarasan ஆவது இந்த இலக்கணப்படி சரியாகும். இதுவே நடனம் (Nadanam) என்ற தமிழ்ச்சொல் மூலமானால் நடனத்துக்கு அரசன், நடராசன் (Nadarasan) என்பதும் சரியே!
எனவே Natarajan என்பது சமஸ்கிருத சொல். அதுவே Natarasan என்பது தொல்காப்பியப்படி தமிழாக்கப்பட்ட வடசொல். Nadarasan என்பது தூய தமிழ் சொல் என்று கொள்ளலாமா?
வெகுநாட்களுக்குமுன் வாணிபத்துக்கு அயல்நாடு சென்ற தமிழர்களுக்கு தமிழ் பாரம்பரியத்தில் பற்று அதிகம். தாய்நாட்டிலிருந்து தொலைவில் இருப்பதால் இது இயற்கையே! ஆதலால், Nadarasan என்ற வடமொழி கலப்பில்லாத தமிழ்ப்பெயரில் அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால்தானோ இலங்கை, மலேஷிய தமிழிர்களிடம் Nadarasan என்ற பெயர் உபயோகத்தில் உள்ளது என கொள்ளலாம். ஆனாலும் தென்னாட்டில் என்னவோ Natarajan என்பது வழக்கத்தில் தங்கிவிட்டது.
என்னதான் சொல்லுங்கள், அந்த சிலைவடிவத்தின் அழகு ஒரு புறம் இருக்கட்டும். அதனால் பிரபஞ்சத்தின் தத்துவ விளக்கங்களை எடுத்து உறைக்க ஒரு வெளிநாட்டவர்தான் தேவைப்படுகிறது : Fritjof Capra என்ற ஆஸ்ட்ரிய நாட்டவர் எழுதிய The Tao of Physics புத்தகத்தில் இது விரிவாக விளக்கப்பட்டிருப்பது பெரும் வியப்புதான்! அணுக்களுக்குள் துகள்கள் எப்போதும் ஓட்டத்திலேயே இருக்கும் தத்துவத்தை, பிரபஞ்சத்தின் நாட்டியம் (cosmic dance) என இவர் வர்ணிக்கிறார். இந்த விஞ்ஞான உணர்வை சூசகமாக அறிய முடிந்த நம் முன்னோர்களின் இந்த புரிதல் ஒரு வியப்புதான்!


